வைரல் வீடியோ... கைக்குழந்தையுடன் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த தவெக எம்.எல்.ஏ. பல்லவி - விஜய் வழங்கிய அறிவுரை!

 

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாமண்டூர் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 25 கிராமங்கள் வழியாக நடைபெற்ற பிரம்மாண்டமான வாகனப் பேரணியின்போது, பொதுமக்களின் அலைக்கடலால் அப்பகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. இந்த பிரச்சாரப் பயணத்தின் இடையே, முதலமைச்சர் விஜய்யின் மனிதாபிமானமும் வெளிப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

மதுராந்தகத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தவெக தொண்டர்களும் பொதுமக்களும் முண்டியடித்துக்கொண்டு திரண்டிருந்தனர். இந்த தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாகத் தவெக எம்.எல்.ஏ. பல்லவி அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கைக்குழந்தையுடன் கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டிருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் களம் என்பதால் கடும் நெரிசலும், தொண்டர்களின் ஆரவாரமும் அதிக அளவில் இருந்தன.

allowfullscreen

திறந்த வெளிப் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி கையசைத்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், கூட்டத்திற்கு மத்தியில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. பல்லவியைக் கவனித்தார்.

பெருந்திரளான மக்கள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதும் இந்நிலையில், கைக்குழந்தையுடன் கூட்டத்திற்குள் நிற்பது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்த முதலமைச்சர் விஜய், உடனடியாகத் தனது வாகனத்தில் இருந்தபடியே கைகளால் சைகை காட்டினார்.

"ஏன் அம்மா, இந்த நெரிசலான கூட்டத்தில் கைக்குழந்தையை வேறு தூக்கிக்கொண்டு வந்து இருக்கிறீர்கள்? சீக்கிரமாகப் பாதுகாப்பான ஓடமான இடத்திற்குச் செல்லுங்கள்" என்பது போல அவர் கனிவோடு ஆனால் உறுதியாகச் சைகை செய்து அறிவுறுத்தினார்.

தேர்தல் பரபரப்பு, அரசியல் விமர்சனங்கள் மற்றும் கடுமையான பிரச்சாரச் சூழல்களுக்கு நடுவே, தன் கட்சியைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் காட்டிய இந்த அக்கறை அப்பகுதி மக்களிடையேயும், கட்சியினர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களத்தின் அனல் பறக்கும் தருணங்களுக்கு இடையில் நிகழ்ந்த இந்த எளிய மற்றும் பாசமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.