வைரல் வீடியோ... தங்கச் செயினைப் பறித்த கொள்ளையன்... பைக்கை எட்டி உதைத்து மடக்கிப் பிடித்த மூதாட்டி!

 

கடந்த இரு தினங்களாக இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பைக்கில் வந்து செயின் பறித்த கொள்ளையனை எட்டி உதைத்து மூதாட்டி ஒருவர் நகையை மீட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர் இணையவாசிகள்.

கேரள மாநிலம் பாறசாலை அருகே, நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையனை, அவர் துணிச்சலுடன் செயல்பட்டு கீழே தள்ளிப் பிடிக்க உதவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

கன்னியாகுமரி – கேரள எல்லைப் பகுதியான பரசுவைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னகுமாரி (61). இவர் அப்பகுதியில் உள்ள கால்வாய்க் கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், செல்போனில் பேசுவது போல் நின்று அவரைக் கண்காணித்துள்ளார்.

மூதாட்டி அருகில் வந்ததும், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றார். இதனால் பதற்றமடையாத பிரசன்னகுமாரி, உடனடியாக அந்த மோட்டார் சைக்கிளை காலால் எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறிய கொள்ளையன் வாகனத்துடன் சாலையோர பள்ளத்தில் விழுந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆறையூர் பகுதியைச் சேர்ந்த விஜயதாஸ் (40) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து நகையை மீட்ட போலீசார், அவரைக் கைது செய்தனர்