இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விராட் கோலி பங்கேற்க வாய்ப்பு - காயத்திலிருந்து மீண்டு தீவிர உடற்பயிற்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட தொடை தசைநார் காயத்திலிருந்து மிக வேகமாக மீண்டு வருகிறார். இதன் காரணமாக, வரும் ஜூலை 14ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 31 அன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணிக்காக விளையாடி 75 ரன்கள் எடுத்தபோது விராட் கோலிக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்பொழுது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிட நேர்ந்தது. அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டார்.
தற்போது லண்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் 37 வயதான விராட் கோலி, அங்குள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி முதற்கட்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது காயம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாகக் குணமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அடுத்த 3 முதல் 4 நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக விராட் கோலி இந்தியா திரும்பி, பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய விளையாட்டுக் கழக மையத்தில் தங்கி தனது அதிகாரப்பூர்வ உடற்தகுதித் தேர்வை எதிர்கொள்ள உள்ளார்.
அங்குள்ள விளையாட்டு அறிவியல் குழுவினரின் மருத்துவப் பரிசோதனையில் அவர் முழு உடற்தகுதியை எட்டியுள்ளது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இணைக்கப்படுவார்.
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு விராட் கோலி இந்திய அணியின் முக்கியத் தூணாகக் கருதப்படுவதால், அவர் விரைவில் முழுத் தகுதியுடன் களம் திரும்புவதை உறுதி செய்ய பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் போட்டிகள் ஜூலை 14, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பர்மிங்காம், கார்டிஃப் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.