விராட் கோலிக்கு முதலிடம்.. உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்களைத் தேர்ந்தெடுத்தார் வில்லியர்ஸ்!

 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவானும், 'மிஸ்டர் 360' என்று அழைக்கப்படுபவருமான ஏபி டி வில்லியர்ஸ், உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த 3 பேட்ஸ்மேன்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அவர் முதலிடம் வழங்கியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ஜாம்பவான்களை வரிசைப்படுத்தியுள்ள டி வில்லியர்ஸின் பட்டியலில் சமகால கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று போற்றப்படும் விராட் கோலியை உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகத் தேர்ந்தெடுத்து முதலிடத்தை அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கிற்குப் பட்டியலில் இரண்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இடதுகை பேட்டிங்கில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காராவைத் தனது பட்டியலின் மூன்றாவது வீரராகத் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக நீண்ட காலம் இணைந்து விளையாடியதன் மூலம் விராட் கோலியும், ஏபி டி வில்லியர்ஸும் மிக நெருங்கிய நண்பர்களாக விளங்கி வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா போன்ற பல வரலாற்று நாயகர்கள் இருந்தபோதிலும், தனது நெருங்கிய நண்பரான விராட் கோலியின் ஆட்டத்திறன் மற்றும் ரன் குவிக்கும் வேகத்தின் அடிப்படையில் அவருக்குத் டி வில்லியர்ஸ் வழங்கியுள்ள இந்த முதலிடம் மற்றும் உயரிய கௌரவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.