2 கோடி ரூபாய் வாடகை பாக்கி ... விராட் கோஹ்லி ’ஒன்8’ உணவகத்திற்குச் சீல்.!
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் ஒரு காலத்தில் இணைந்திருந்த பெங்களூருவின் பிரபல 'ஒன்8 கம்யூன்' (One8 Commune) ஹோட்டல் தற்போது நீதிமன்ற உத்தரவின்படி அதிரடியாக மூடப்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் வாடகை மற்றும் இதர நிலுவைத் தொகைகள் செலுத்தப்படாமல் இருந்ததே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகும். இந்த ஹோட்டலை நிர்வகித்து வந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களாக வாடகையை முறையாகச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கட்டிட உரிமையாளர் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தும் வரை ஹோட்டலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உணவகம் தொடங்கப்பட்ட போது விராட் கோலியின் பெயருடன் இணைக்கப்பட்டிருந்ததால் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே விராட் கோலி இந்தத் திட்டத்திலிருந்து முழுமையாக வெளியேறி தனது பிராண்ட் பெயரையும் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலி வெளியேறிய பிறகு இந்த ஹோட்டலின் வருவாய் சரிந்ததோடு பல சட்டச் சிக்கல்களும் வரிசையாகத் தொடர்ந்தன. குறிப்பாகத் தீயணைப்புத் துறையின் அனுமதி பெறாதது மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கியது போன்ற புகார்கள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை இந்த ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஹோட்டலை நிர்வகித்து வந்த நிறுவனம் நீதிமன்றத்தில் நிலுவைத் தொகைகளைச் செலுத்தத் தவறினால் ஹோட்டலை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த உணவகம் சில ஆண்டுகளிலேயே பல சர்ச்சைகளில் சிக்கியது பெங்களூரு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் பெயர் நீக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர் வருகை குறைந்ததே இந்த நிதி நெருக்கடிக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த உணவகம் பூட்டப்பட்டிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.