கன்னிகைப்பேர் வாயு கசிவு ... ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் வடசென்னை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அம்மோனியா நச்சு வாயு கசிவு விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தி வெளியாகி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அவசரச் சிகிச்சைகளை நேரில் கண்காணிக்குமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் அவசர அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்து சென்றார். மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அங்கு அவசரச் சிகிச்சைப் பிரிவிலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து அங்கிருந்த டீன் மற்றும் தலைமை மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்:

நச்சு வாயுவின் வீரியத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உயர்தரச் சிகிச்சைகளும் இலவசமாக, தங்கு தடையின்றி வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் அவசர மருத்துவக் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு எவ்விதப் பற்றாக்குறையும் ஏற்படக் கூடாது எனவும் அங்குள்ள மருத்துவக் குழுவினருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.