மகளுக்கு காதல் தொல்லைத் தந்த வாலிபரைக் கண்டித்த தந்தை கொடூரக் கொலை: விருதுநகரில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பள்ளி மாணவிக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரைக் கண்டித்த தந்தை, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த அய்யனார் (38) என்பவரின் பள்ளி படிக்கும் மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தனது மகளுக்குத் தொல்லை கொடுத்து வந்த பெரியசாமியை அய்யனார் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுத் தீவிர முன்விரோதம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெரியசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அய்யனார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய பெரியசாமியை தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.