சொத்து வரி பெயர் மாற்றத்திற்கும் லஞ்சமா? ரூ.3,000 வாங்கிய வருவாய் ஆய்வாளர் அதிரடி கைது!

 

 

விருதுநகரில் சொத்து ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

விருதுநகரைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர், தனது சொத்து ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்தப் பணியைச் செய்து முடிக்க வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.3,000 கொடுக்க மைக்கேல் ராஜ் ஒப்புக்கொண்டார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து, டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3,000 பணத்தை மைக்கேல் ராஜிடம் கொடுத்து அனுப்பினர்.

அவர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை ஹென்றி டேவிட்டிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.