கொடூரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி  விசிக பிரமுகர் வெட்டி கொலை!

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. 52 வயதாகும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை இவர் குரண்டி கண்மாய் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென அவரை வழிமறித்து வழிப்பறிக்கு முயன்றுள்ளது.

அந்த மர்ம கும்பல் விஜயகுருவின் கண்களில் திடீரென மிளகாய் பொடியைத் தூவியுள்ளது. இதனால் நிலைகுலைந்து போன அவரை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்த விஜயகுரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜயகுரு சமூக விரோத செயல்களை போலீசுக்கு காட்டி கொடுத்ததால் கொல்லப்பட்டாரா அல்லது உறவினர் மரணம் தொடர்பான பகையினால் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.