லாரி டிரைவர் மகள்... 42 ஆண்டு சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்! தந்தை கண்கலங்கிய நெகிழ்ச்சி

 

 

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் புதிய தேசிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்ற அவர், பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.டி.உஷா 55.42 விநாடிகளில் பதிவு செய்திருந்ததே இதுவரை இந்திய தேசிய சாதனையாக இருந்தது. 2023 ஆசிய விளையாட்டில் இதே 55.42 விநாடிகளில் ஓடி அந்த சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்திருந்தார். தற்போது நாகோயாவில் 54.75 விநாடிகளில் ஓடி, அந்த சாதனையை மேலும் 0.67 விநாடிகள் குறைத்துள்ளார்.

allowfullscreen

இந்த சாதனையின் பின்னால் வித்யாவின் குடும்பத்தின் பல ஆண்டுகால உழைப்பும் போராட்டமும் உள்ளது. அவரது தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். விளையாட்டுப் பயிற்சி, காலணி, உபகரணங்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகமாக இருந்தபோதிலும், மகள்களின் விளையாட்டு பயணத்திற்கு அவர் தொடர்ந்து ஆதரவளித்ததாக வித்யா தெரிவித்துள்ளார்.

வித்யா மற்றும் அவரது இரட்டை சகோதரி நித்யா ஆகிய இருவரும் தடகளத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தாயார் இருவரையும் ஈரோட்டில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர்த்துள்ளார். இதன் மூலம் பயிற்சி மற்றும் தங்குமிடத்துக்கான செலவுகளை சமாளிக்க குடும்பத்துக்கு உதவியாக இருந்தது.

ஒரு கட்டத்தில் தேசிய முகாமில் இருந்து விலகி தனியாகப் பயிற்சி மேற்கொண்ட வித்யாவுக்கு, அவரது இரட்டை சகோதரி நித்யாவும் பொருளாதார ரீதியாக உதவியுள்ளார். பின்னர் இந்திய ரெயில்வேயில் பணியில் சேர்ந்த வித்யா, தொடர்ந்து தனது விளையாட்டு பயணத்தை முன்னெடுத்தார்.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றதுடன் 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் முறியடித்த வித்யாவின் வெற்றி, அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநராக உழைத்த தந்தையின் மகள் இன்று இந்தியாவின் தேசிய சாதனை வீராங்கனையாக உயர்ந்திருப்பது, அவரது நீண்ட பயணத்தின் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.இதற்கிடையே, வித்யா ராம்ராஜின் சாதனையை பாராட்டிய தமிழக அரசு, அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.