பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலா நீக்கம்!

 

'அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த வி.கே.சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அதன் தலைவர் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் சக்கரவர்த்தி, "கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகச் சசிகலா அமைப்பில் இணைந்து பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு அவர் எந்தவொரு கட்சிப் பணிகளிலும் ஈடுபடவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலமுறை தொடர்புகொண்டு சந்திக்க முயன்றும், சசிகலாவைச் சந்திக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தேர்தல் நேரத்தில் எங்களைச் சசிகலா பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சிக்கு எந்தவொரு செயல்பாடும் நன்மையும் இல்லை" என்று சக்கரவர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

சசிகலாவின் கட்சி நீக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவின் நீக்கம் தொடர்பான தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்படும் என்றும் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.