காலையிலேயே திரண்ட தொண்டர்கள்... இன்று தஞ்சையில் உதயநிதி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளில் தவெக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில், தவெக அரசு உரிய அழுத்தத்தைக் கொடுக்கத் தவறிவிட்டது என திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேட்டூர் அணையைத் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவிரி நீருக்கான தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உடனடியாகச் சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விடுத்த அறிவிப்பின் பேரில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கூடுவார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தஞ்சாவூர் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.