"வாக்கு நமது கடைசி ஆயுதம்!" - நீலாங்கரையில் மனைவி கயல்விழியுடன் சீமான் ஓட்டு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு அதிகாலையிலேயே வருகை தந்தார். தனது மனைவி கயல்விழியுடன் வந்த அவர், பொதுமக்களோடு வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், தனது மை வைத்த விரலைக் காட்டிப் பேசியபோது "மக்களுக்கு இருக்கும் கடைசி ஆயுதம் வாக்கு மட்டுமே. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாக்களிக்காமல் வீட்டில் இருப்பது ஜனநாயகத்திற்குச் செய்யும் பெரும் துரோகம். ஒரு மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் தங்களது வாக்கைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்," என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இந்த முறை தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சீமான் வாக்களிக்க வந்தபோது நீலாங்கரை பகுதியில் தம்பிமார்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தைத் தொடர்ந்து சீமானும் அதிகாலையிலேயே வந்து வாக்களித்துள்ளது மற்ற அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஒரு வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.