கெத்து காட்டிய தமிழக வாக்காளர்கள்... தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள்.. முழு லிஸ்ட்!

 

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்று (ஏப்ரல் 23, 2026) வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரியாக 85.12% ஆகப் பதிவாகியுள்ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86.11 சதவீதமும், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.08 சதவீதமும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 84.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக வீரபாண்டி தொகுதியில் 93.41% வாக்குகளும், கரூர் தொகுதியில் 93.39% வாக்குகளும் பதிவாகி சாதனை படைத்துள்ளன. அதேபோல் குளித்தலை (92.80%), குமாரபாளையம் (92.65%), பாலக்கோடு (92.57%) மற்றும் சங்ககிரி (92.50%) ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 92 சதவீதத்தைக் கடந்து அதிரடி காட்டியுள்ளது.

வட மாவட்டங்களில் செய்யாறு (91.97%), ஆற்காடு (91.01%), உத்திரமேரூர் (91.14%) மற்றும் வானூர் (91.08%) ஆகிய தொகுதிகள் முன்னிலை வகிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் பவானி (91.96%), அரவக்குறிச்சி (91.74%) மற்றும் திருப்பூர் தெற்கு (90.71%) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு அமோகமாக இருந்துள்ளது.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை வேடசந்தூர் (91.61%), நத்தம் (90.93%) மற்றும் ஒட்டன்சத்திரம் (90.60%) ஆகிய தொகுதிகள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், பாளையங்கோட்டை தொகுதியில் மிகக் குறைவாக 68.97% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களில் ஆலந்தூர் (86.15%), அண்ணாநகர் (85.49%), கோவை தெற்கு (82.14%) மற்றும் திருச்சி கிழக்கு (81.77%) ஆகிய தொகுதிகளில் சராசரியான வாக்குப்பதிவு நிலவுகிறது.

ஒட்டுமொத்தமாக கிராமப்புறத் தொகுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.