விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் எகிறிய வாக்குப்பதிவு... அதிகரித்த வாக்கு எண்ணிக்கை!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பதிவாகிப் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை பெரம்பூர் தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த முறை 3,000 வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. அதேபோல் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில், கடந்த முறையை விட 8,300 வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

விஜய் முதல் முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வருகை அதிகரித்ததே இந்த வாக்கு உயர்விற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

பெரம்பூர் தொகுதியின் ஒரு பகுதியான வியாசர்பாடியில் இன்று ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்ததாகக் கூறி, தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக அவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட தூரம் வரிசையில் நின்ற பிறகு பெயர் இல்லை என்ற தகவல் வந்ததால் அவர்கள் ஆத்திரமடைந்து முழக்கமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களைச் சமாதானம் செய்தனர்.