தமிழகம முழுவதும் வாக்குப்பதிவு முடிந்தது... மே 4-ல் வெளியாகிறது மக்களின் இறுதித் தீர்ப்பு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 23 மாலை 6 மணியுடன் மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த ஜனநாயகத் திருவிழாவில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 மணிக்கு மேல் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 85% முதல் 90% வரை உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. மாவட்ட வாரியாக நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

மாநிலம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி ஏஜெண்டுகளின் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய், சீமான் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுக்காக ஒட்டுமொத்த இந்தியாவே தற்போது ஆவலுடன் காத்திருக்கிறது.