சீல் வைக்காமல் வாக்கு இயந்திரங்கள்? - வாகனத்தை மறித்து அதிமுகவினர் போராட்டம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில், ஆலந்தூர் தொகுதியில் அதிமுகவினர் நடத்திய முற்றுகைப் போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குக் கொண்டு செல்வதற்காக வாகனங்களில் ஏற்றினர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த இயந்திரங்கள் முறையாக 'சீல்' வைக்கப்படவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

சீல் வைக்கப்படாத இயந்திரங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி, வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்துச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்காமல் இயந்திரங்களைக் கொண்டு செல்வது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் வாதிட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே தமிழகத்தில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இத்தகைய புகார்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து மண்டல அளவிலான தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.