மீண்டும் போர் வெடித்தது.. ஈரான் மீது 80 இடங்களில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 3 சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் மிகச் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் மத்திய கட்டளைத் தலைமையகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டுச் சென்று கொண்டிருந்த கத்தார், சவூதி அரேபியா மற்றும் லைபீரியக் கொடிகொண்ட 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரானின் 80-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது துல்லியமான குண்டுகளை வீசித் தகர்த்துள்ளன.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு ரேடார்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் ஏவுதளங்கள் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட அதிவேகச் சிறிய ரகப் படகுகள் இந்த அமெரிக்கத் தாக்குதலில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலால் தெற்கு ஈரானின் முக்கியப் பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் முக்கியத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ், கடலோர நகரான சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இதில் சிரிக் பகுதியில் உள்ள வணிக மற்றும் மீன்பிடித் தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா ஜூன் 17 அன்று கையெழுத்திட்ட தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், கச்சா எண்ணெய் விற்பனைக்கான சுங்க அனுமதியை ரத்து செய்து நயவஞ்சகமாக நடந்து கொண்டதாகவும் ஈரான் சாடியுள்ளது. மேலும், அமெரிக்கா நடத்திய இந்த நள்ளிரவு வான்வழித் தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்கள் வசிக்கும் மற்றும் மீன்பிடிப் பகுதிகளே குறிவைக்கப்பட்டதாகவும், சிதறிய குண்டுகளின் துகள்கள் பட்டுப் பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
தங்களது நாட்டின் இறையாண்மையைக் காக்க அமெரிக்காவிற்கு எதிராக மிகத் தீவிரமான மற்றும் தீர்க்கமான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்குகள் நடந்து வரும் வேளையிலேயே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவும், கடல்சார் போக்குவரத்தை முறைப்படுத்தவும் பன்னாட்டுப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ஹார்முஸ் கடல் எல்லையில் தங்களது கண்காணிப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.