தொடரும் போர்,,, மீண்டும் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்!

 

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் போர்ப் பதற்றம் தற்போது உலகளாவிய எரிசக்திப் போராக உருவெடுத்துள்ளது. 

ஈரானிய புரட்சிகர காவல் படையின் மூத்த தளபதிகள் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள பாதுகாப்புத் தகவல்களின் படி,  அமெரிக்கப் படைகளின் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 'ஹார்முஸ் நீரிணை' கடல் வழித்தடம் அடுத்த மறுஅறிவிப்பு வரும் வரை வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படுகிறது.

வளைகுடாப் பகுதியில் தங்களது இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் சர்வதேசக் கப்பல்கள் எவை பயணித்தாலும் அவை மீது கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை என்பது உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாகக் கருதப்படுகிறது. இதன் முடக்கத்தால் சர்வதேசச் சந்தையில் நெருக்கடிகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் நுகரப்படும் ஒட்டுமொத்தக் கச்சா எண்ணெய்யில் சுமார் 20 முதல் 30 சதவீத எண்ணெய் இந்த ஒற்றை வழித்தடம் வழியாகவே பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இது மூடப்பட்டுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றிற்கு வரலாறு காணாத வகையில் உயரத் தொடங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகத் தேசங்களில் மீண்டும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உறைந்துள்ளது.

எரிபொருட்களின் விலை மும்மடங்கு உயர்ந்தால், கப்பல் மற்றும் லாரி வாடகைகள் அதிகரித்து உலக நாடுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும். இது ஏற்கனவே போரினால் தவித்து வரும் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் கடுமையான பணவீக்கத்தையும், நுகர்வோர் அழுத்தத்தையும் உருவாக்கும்.

ஏற்கனவே நடப்பு ஜூன் மாதத் தொடக்கத்தில் சென்னையில் வணிக சிலிண்டர் விலை 3,283 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 107.87 ரூபாயாகவும் உயர்ந்திருந்த நிலையில், ஈரானின் இந்த முழுமையான வழித்தட முடக்கம் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இந்திய அரசு தற்போது ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாற்று வழித்தடங்கள் மூலம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்தும், நாட்டின் அவசரக்கால எண்ணெய் இருப்பைச் சேமித்துப் பயன்படுத்துவது குறித்தும் மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.