மீண்டும் போர் பதற்றம்... ஹார்மூஸ் பாதையில் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம் - உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

 

மத்திய கிழக்கு நாடுகளில் அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலானது, சுமார் 40 நாட்களாக மிகக் கொடூரமாக நீடித்து வந்தது. அதன் பின்னர் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2 வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாகச் சற்றே தணிந்திருந்த போர்ச் சூழல், இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தானில் நடந்த 21 மணி நேர அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வியைத் தொடர்ந்து ஈரானின் முக்கியத் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து கொண்டு கடுமையான பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவின் இந்த நெறிமுறையற்ற கடல் முற்றுக நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உலக அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈரான் அரசு தற்போது புதிய வியூகம் வகுத்துள்ளது.

அதன்படி, உலக அளவில் 5-ல் ஒரு பங்கு சரக்குக் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இந்த ஜலசந்தி வழியே செல்லும் அனைத்து வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்களுக்கும் புதிய சுங்கக் கட்டணங்கள் மற்றும் கடுமையான வரிகளை விதிக்க ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று முறைப்படி கொண்டு வரப்படவுள்ளது. இந்த விவேகமான புதிய கடல்சார் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ், எரிசக்தி மற்றும் உணவு வினியோகத்திற்கான சரக்குகளைக் கொண்டு செல்லும் அனைத்து சர்வதேசக் கப்பல்களும் அதற்கு ஈடாக ஈரானுக்குக் கட்டாயம் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில் பேசிய ஈரானிய நாடாளுமன்றத் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராகிம் அஜிஜி, ஹார்மூஸ் ஜலசந்தியின் வழியே குறிப்பிட்ட பாதையில் கப்பல்கள் பயணிக்கும் வகையிலான புதிய இயக்க நடைமுறைகளைத் தங்களது நாட்டு அதிகாரிகள் முழுமையாகத் தயாரித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானால் நிர்வகிக்கப்படும் இந்த உன்னதமான கடல் வழியில், தங்களது நாட்டுடன் சுமுகமாக ஒத்துழைக்கும் நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் மட்டுமே செல்ல இனிமேல் முறைப்படி அனுமதி அளிக்கப்படும் என்றும், இந்த போக்குவரத்து மேலாண்மைக்கு ஈடாக ஈரான் அரசு புதிய கட்டணங்களை வசூலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச நுகர்வோர்கள் மற்றும் உலக வர்த்தக அமைப்புகள் மத்தியில் மாபெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரானின் இந்த திடீர் முடிவு, அந்தப் பிராந்தியத்தில் தங்களது இறையாண்மையை உறுதிப்படுத்துவதுடன் மாபெரும் பொருளாதார வருவாயை ஈட்டிக் கொள்ளும் ஒரு புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.