போர் பதற்றம்.. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நாளை மார்ச் 2ம் தேதி நடைபெற இருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 3ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மார்ச் 5-ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கும்.
வான்வெளித் தடை, போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் போர் பதற்றம் காரணமாக மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவது கடினம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்தியாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தியாவில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அந்தந்தப் பள்ளிகள் மூலம் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
உலகம் முழுவதும் சுமார் 28 நாடுகளில் 240-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இதில் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் கணிசமான எண்ணிக்கையிலான பள்ளிகள் உள்ளன. போர்ச் சூழல் காரணமாக இந்தப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.