undefined

போர் பதற்றம்... சென்னையில் இன்றும் விமான சேவைகள் பாதிப்பு.. 33 விமானங்கள் ரத்து!

 

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்றும் விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான்வெளிப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், குவைத் மற்றும் மஸ்​கட் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 17 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அந்த நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 28) 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். லண்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்கள் வழக்கமாக ஈரான் வான்வெளியைப் பயன்படுத்துகின்றன. தற்போது அந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால்: விமானங்கள் தற்போது ஆப்பிரிக்கா அல்லது பிற பாதுகாப்பான நாடுகளின் வான்வெளி வழியாகச் சுற்றி வருகின்றன.

இதனால் பயண நேரம் 3 முதல் 5 மணி நேரம் வரை அதிகரிக்கக்கூடும். பல மணி நேரத் தாமதம் காரணமாகச் சில நீண்டதூர விமானங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படும் முன்பாக தங்களது விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் விமானத்தின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இண்டிகோ, ஏர் இந்தியா, எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் பயணிகளுக்குத் தகவல் தெரிவித்து வருகின்றன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்குப் பதிலாக மாற்றுத் தேதிகளில் பயணம் செய்யவோ அல்லது முழுத் தொகையையும் திரும்பப் பெறவோ வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதி முழுவதும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி வளைகுடா நாடுகளின் வான்வெளி எல்லைகள் மூடப்பட்டுள்ளதே இந்த விமானச் சேவைப் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகும்.