போர் பதற்றம்... ஈரானுக்குள் தரைவழித் தாக்குதலுக்கு திட்டமிடும் அமெரிக்கா... 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய படை குவிப்பு!
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் தொடங்கிய அமெரிக்க-ஈரான் போர், இப்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஈரானின் ராணுவ வலிமையைச் சிதைத்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறினாலும், இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்கள் ஓயவில்லை. இதனால், போரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே 50,000 அமெரிக்கப் படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது யு.எஸ்.எஸ். திரிபோலி என்ற பிரம்மாண்ட போர்க்கப்பல் 3,500 கூடுதல் வீரர்களுடன் மத்திய கிழக்கு எல்லைக்குள் வந்து சேர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா செய்துள்ள மிகப்பெரிய படை குவிப்பு இதுவாகும். நீர்நிலத் தாக்குதல் மற்றும் அதிநவீன போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இந்தக் கப்பல், தரைவழித் தாக்குதலுக்குப் பெரும் பலமாக அமையும்.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, ஈரானுக்குள் தரைவழியாக ஊடுருவித் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரகசியத் திட்டங்களைத் தயாரித்துள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மற்றும் உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் ஜலசந்தி அருகிலுள்ள கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு வான்வழித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், தரைவழித் தாக்குதலுக்கான இறுதி ஒப்புதலை அதிபர் டிரம்ப் இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஈரானின் புவியியல் அமைப்பு (மலைகள் மற்றும் கடினமான நிலப்பரப்பு) தற்காப்புக்கு மிகச் சிறந்தது என்பதால், தரைவழியாக உள்ளே நுழைவது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். "ஈரானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்குவது கன்னிவெடியில் கால் வைப்பதற்குச் சமம்" என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், வான்வழித் தாக்குதல்கள் மட்டும் ஈரானை முழுமையாகப் பணிய வைக்காது என்பதால், பென்டகன் தரைவழித் தாக்குதலுக்கான வியூகத்தை வகுத்து வருகிறது.