போர் பதற்றம்... ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி - 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!

 

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட அதிநவீன போர் கப்பல்களை அமெரிக்கக் கடற்படை நிறுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இந்த முற்றுகையின் ஒரு பகுதியாக, ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற சுமார் 61 வணிகக் கப்பல்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், முற்றுகை விதிகளை மீறியதாகக் கூறப்படும் 4 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையால் ஈரானின் விநியோகச் சங்கிலி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியில் மீண்டும் பழைய நிலை திரும்ப வேண்டும் என அண்டை நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதே வேளையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்தவும், கடல்வழிப் பாதையில் ஈரானின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.