இந்த 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும்!
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை கோயம்புத்தூர், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களிலும், அதனைத் தொடர்ந்து நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.