48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்கவில்லையா? வாரன் பஃபெட்டின் வினோத பழக்கம்!

 

 

அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்கவில்லை என்று தன்னிடம் கூறியதாகத் தொழிலதிபர் பில் ஆக்மேன் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

‘Equity Mates Investing’ என்ற பாட்காஸ்டில் பேசிய பில் ஆக்மேன், பல ஆண்டுகளுக்கு முன்பு பஃபெட் தனது வீட்டிற்கு விருந்தினராக வந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அப்போது அவருக்குத் தண்ணீர் அல்லது சோடா தண்ணீர் வழங்கலாமா எனக் கேட்டபோது, பஃபெட் மறுத்துவிட்டு தனக்குப் பிடித்த செர்ரி கோக் கேட்டதாகக் கூறினார். தண்ணீர் குடிப்பதில்லையா என்று ஆக்மேன் கேட்டபோது, 48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்கவில்லை எனப் பஃபெட் பதிலளித்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

பஃபெட் தினமும் சுமார் 5 கேன்கள் கோக் குடிப்பவர் என்பது ஏற்கெனவே அறியப்பட்ட தகவல். 2015ஆம் ஆண்டு அவர் அளித்த பேட்டியில், தனது தினசரி 2,700 கலோரி உணவில் சுமார் 25 சதவீதம் கோக் மூலம் கிடைப்பதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் பெப்சி குடித்து வந்த பஃபெட், 1986ஆம் ஆண்டு செர்ரி கோக்கிற்கு மாறினார். இருப்பினும், தண்ணீர் குடிக்கவில்லை என்ற தகவல் ஆக்மேனின் பழைய சந்திப்பு குறித்த நினைவுகூரல் மட்டுமே; பஃபெட்டின் தற்போதைய குடிப்பழக்கத்தை இது உறுதிப்படுத்தவில்லை.