தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? எடப்பாடியில் பதற்றம் - போலீசார் குவிப்பு!

 

சேலம் மாவட்டத்தின் விஐபி தொகுதியான எடப்பாடியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அருண்குமார், இன்று மதியம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று காலை முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. த.வெ.க வேட்பாளர் அருண்குமார் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

மதியம் 2 மணியளவில் மனுக்கள் பரிசீலனை செய்துகொண்டிருந்தபோது, திடீரென அருண்குமார் அங்கிருந்து மாயமானார். அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாகியும் வேட்பாளர் வராததால் அதிர்ச்சியடைந்த த.வெ.க தொண்டர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் தேடினர். அவர் எங்கே சென்றார் என்பது தெரியாததால் பதற்றம் அதிகரித்தது.

வேட்பாளர் அருண்குமாரை எதிர்க்கட்சியினர் யாராவது மிரட்டிக் கடத்திச் சென்றிருக்கலாம் அல்லது தேர்தல் அதிகாரிகளின் அழுத்தத்தால் அவர் மறைந்திருக்கலாம் எனச் சந்தேகித்த த.வெ.க தொண்டர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "எங்கள் வேட்பாளர் எங்கே? ஜனநாயகப் படுகொலை நடக்கிறது!" என முழக்கமிட்டதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். "அருண்குமாரைக் கண்டுபிடித்துத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை அமைதி காக்க வேண்டும்" என போலீசார் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், வேட்பாளர் இன்னும் கிடைக்காததால் எடப்பாடி தொகுதி முழுவதும் த.வெ.க தொண்டர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

தமிழக அரசியலில் களம் கண்டுள்ள புதிய கட்சியான த.வெ.க-வின் வேட்பாளர் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்தச் சம்பவம், மற்ற தொகுதி வேட்பாளர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.