சத்துணவில் உப்பிற்குப் பதிலாக வாஷிங் பவுடர்... பீகாரில் 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில், உப்பிற்குப் பதிலாகத் தவறுதலாக வாஷிங் பவுடர் கலக்கப்பட்டதால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அன்றாட மதிய உணவு வழங்கப்பட்ட போது, உணவில் உப்பு குறைவாக இருப்பதாக மாணவர்கள் சமையல் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சமையல் அறையிலிருந்த பணியாளர்கள் உப்பு என நினைத்து அருகில் வைக்கப்பட்டிருந்த துணி துவைக்கும் வாஷிங் பவுடரை எடுத்து உணவில் தவறுதலாகக் கலந்து மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர்.

ரசாயனம் கலந்த இந்த உணவைச் சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையிலான இந்த அலட்சியப் போக்கு குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் சமையலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.