பெண்களே உஷார்... மேடம் வாஷ்ரூம் போகணும்... வீட்டிற்குள் புகுந்து நிர்வாணமாக வந்த டெலிவரி ஊழியர் !
வீட்டு வாசலுக்கே தேடி வரும் பார்சல் டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பும் வகையில் பெங்களூருவில் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. 30 வயது பெண் ஒருவர் தனது வீட்டின் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிக்க 'உபெர்' பார்சல் சேவை மூலம் அனுப்பியுள்ளார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி காலையில் மகேஷ் என்ற டெலிவரி ஊழியர் அந்தப் பத்திரத்தைக் கொண்டு வந்து ஓடிபி எண்ணைக் கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஓடிபி எண்ணை எடுப்பதற்காக மொபைல் போனைப் பார்க்க உள்ளே சென்ற போது, அனுமதி இன்றி அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
வாஷ்ரூம் செல்ல வேண்டும் என்ற போலி காரணத்தைக் கூறிப் பெண்ணின் கடுமையான மறுப்பையும் மீறி அவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து வெளியில் வந்த அந்த நபர் ஆடைகள் ஏதுமின்றி அநாகரிகமாக நின்று அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால் நிலைகுலைந்து பயந்துபோன அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுப் பாதுகாப்புப் பாதுகாவலரின் உதவியை நாடினார். அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாவலர் இணைந்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த டெலிவரி ஊழியரை மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மகேஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பும் இதேபோல வாஷ்ரூம் கேட்கும் சாக்கில் டெலிவரி ஊழியர் ஒருவர் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கைதானது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிர்ச்சிச் சம்பவங்கள் பெங்களூருவில் தனியாக இருக்கும் பெண்களிடையே பெரும் பயத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கே தேடி வரும் டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.