ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு!

 

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வினாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 மணி நிலவரப்படியும் அதே அளவான வினாடிக்கு 12,000 கனஅடியாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் சினி பால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் சூழலில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றின் அபாயகரமான பகுதிகள் மற்றும் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.