ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 கனஅடியாக உயர்வு... சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்!
தமிழகத்தில் கோடை வெயில் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. வார இறுதி நாட்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இருப்பினும், கர்நாடக மாநிலக் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. வெறும் 300 கனஅடியாகக் குறைந்து காணப்பட்ட நீர்வரத்து, மழையின் தாக்கத்தால் 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லின் பிரதான அருவி, சினி பால்ஸ் மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வெள்ளை நுரை ததும்ப ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தண்ணீர் வரத்து சீராக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் இயற்கை அழகையும், பாறைகளுக்கு நடுவே பாய்ந்து வரும் தண்ணீரையும் ரசித்தனர். மெயின் அருவியில் ஆண்கள் ஒருபுறமும், ஆற்றில் பெண்கள் ஒருபுறமும் உற்சாகமாகக் குளித்து கோடை வெப்பத்தைத் தணித்துக் கொண்டனர். தொங்கு பாலத்தில் நின்றபடி செல்ஃபி எடுத்தும், அருவியின் அழகை ரசித்தும் சுற்றுலாப் பயணிகள் பொழுதைக் கழித்தனர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான 'மீன் சாப்பாடு' விற்பனை இன்று களைகட்டியது. சூடாக மீன் வறுவல் மற்றும் குழம்பை வாங்கிக் கொண்டு, அங்குள்ள பூங்காக்களில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பதை அவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் ஒருபுறம் தகிக்கத் தொடங்கியிருந்தாலும், ஒகேனக்கல்லில் இயற்கை வழங்கியுள்ள இந்தச் சிறிய 'சில்'லென்ற மாற்றம், கோடை விடுமுறையைக் கழிக்க வரும் மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.