சென்னை கடலில் வாட்டர் மெட்ரோ சேவை... எண்ணூர் - மாமல்லபுரம் இடையே இயக்க திட்டம்!
சென்னையின் போக்குவரத்து அமைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தைக் கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோமீட்டர் தூரத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாய் வழியாக அதிநவீனப் படகுப் போக்குவரத்து சேவை திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்குவது குறித்து ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்கான இ-டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், வாட்டர் மெட்ரோ சேவை நடைமுறைக்கு வரும்போது சாலைப் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதிகளுக்குப் பயண நேரமும் பெருமளவில் மிச்சமாகும்.