நீர்வளத்துறை டெண்டரில் முறைகேடு - அமைச்சர் ஆனந்த் மீது குற்றச்சாட்டு!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூர்வாரும் பணிகளுக்கான டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறைந்த ஒப்பந்தப் புள்ளி கோரிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நீர்வளத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது.
அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணிக்கு 'அஜய் பில்டர்ஸ்' நிறுவனம் -6.0% குறைந்த ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. ஆனால், அதனைப் புறக்கணித்துவிட்டு -1.90% மற்றும் -4.90% என அதிகம் கோரிய வெங்கடேஷ் பாபு என்பவரின் நிறுவனத்திற்குச் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் டெண்டரை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் முறைகேடு புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், நீர்வளத்துறையில் தவறிழைத்த செயற்பொறியாளர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் செயற்பொறியாளர் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் மீதான நடவடிக்கைக்கு அரசு தயக்கம் காட்டி வருவதாக நேர்மையான பொறியாளர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.