வயநாடு நிலச்சரிவு.. மேலும் ஒரு சடலம் மீட்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கல்லாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில், மேலும் ஒருவரின் உடல் இன்று  மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிலச்சரிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   4 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களாக வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் கல்லாடி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் பணியாளர்கள் தங்கியிருந்த இடங்கள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டன.

விபத்து நேர்ந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் தீயணைப்புத் துறையினர், பொதுமக்களின் உதவியோடு கடந்த சில நாட்களாக அங்கே போர்க்கால அடிப்படையில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

ராட்சத இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று காலை நடைபெற்ற தேடுதல் பணியின் போது, டன் கணக்கிலான சேற்று மண்ணுக்குள் புதையுண்டிருந்த மற்றொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மண்ணில் புதையுண்டு இன்னும் கண்டறியப்படாமல் உள்ள எஞ்சிய 4 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அந்தப் பகுதி முழுவதும் மீட்புப் படையினர் தொடர்ந்து முகாமிட்டுத் தங்களது மீட்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டு வருகிறது.