"தர்மேந்திர பிரதான் பதவி விலகுவார் என நம்புகிறோம்" - CJP செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்கராய் ஜனதா பார்ட்டி அமைப்பு தீவிர வலியுறுத்தல் செய்து வருகிறது.
ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின் இடையே, CJP தேசிய செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கை குறித்துப் பதிலளிக்க மத்திய அரசு நாளை மதியம் வரை காலஅவகாசம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கும், அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதற்கும் மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், கல்வித் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் ஓய்வடையாது என மாணவர் அமைப்புகள் பிடிவாதமாக உள்ளன:
மத்திய அரசு கேட்டுள்ள அவகாசம் நாளை மதியத்துடன் நிறைவடையும் நிலையில், கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்ப்பதாக CJP செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.