"ஈரானை 4 மாதங்களில் கற்காலத்திற்கு கொண்டு வந்துவிட்டோம்" - 159 போர்க்கப்பல்கள், 200 விமானங்கள் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் முழக்கம்!
ஈரானின் கடல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் அனைத்தையும் தகர்த்து, அந்நாட்டை அமெரிக்க ராணுவம் கற்காலத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட மாதங்களாகப் போர் பதற்றம் நீடித்து வந்தது. இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தற்காலிகத் தீர்வு எட்டப்பட்டாலும், ஹார்மூஸ் ஜலசந்தி கடல் பகுதியில் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதல், போரை மீண்டும் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரானுக்கு எதிராகப் புதிய வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களைத் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் தற்போதைய நிலவரம் குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு எந்த அளவிற்குச் சிதைக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
ஈரானிய ராணுவத்தின் வசமிருந்த மிக முக்கிய 159 போர்க்கப்பல்களும் அமெரிக்கப் படைகளால் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானின் வான் எல்லையைப் பாதுகாத்து வந்த 200 போர் விமானங்களும் முழுமையாகத் தாக்கி அழிக்கப்பட்டுவிட்டன.
ஈரானின் ரேடார் கண்காணிப்புக் கருவிகள், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தளங்கள் என அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஒட்டுமொத்த ராணுவப் பலத்தில் சுமார் 84 சதவீதத்திற்கும் மேலான தளவாடங்கள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப் மேலும் கூறுகையில், "கடந்த 4 மாத காலத் தீவிரத் தாக்குதல்கள் மூலம் ஈரானை நாங்கள் கற்காலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம். தற்போதைய நிலையில் அவர்களிடம் மிகச் சில ஏவுகணைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவர்களின் ராணுவத் திறன் மிகக் குறைந்த அளவிற்குச் சுருங்கிவிட்டது. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான், இனி எனக்கோ அல்லது உலக நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த முடியாது."
டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.