“ஈரான் எனும் புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டோம்!” - அதிபர் டிரம்ப் ஆவேசம்! 

 

மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சமீபத்திய கருத்துக்கள் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை 'புற்றுநோய்' எனச் சாடியுள்ள அவர், அதனை முழுமையாக வேரறுக்கப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க அதிபரும் செய்யத் துணியாததை நாங்கள் செய்து முடித்துள்ளோம்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான போர் குறித்து அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓயப்போவதில்லை என்றும் அவர் முழங்கியுள்ளார்.

மேற்காசியப் போர் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானின் அணு ஆயுத மிரட்டலை உலகப் பாதுகாப்பிற்கு ஆபத்தான ஒரு 'புற்றுநோய்' எனக் குறிப்பிட்டார். "அந்தப் புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டோம். தற்போது தொடங்கியுள்ள இந்தப் பணியை முழுமையாக முடித்து, ஈரானின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்போம்" என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா ஒரு ரகசியத் திட்டத்தை வகுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் எகிப்து அதிகாரிகள் மூலம் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். ஈரானின் அணுசக்தி மற்றும் நீண்டதூர ஏவுகணைத் திட்டங்களை முழுமையாகக் கைவிடுதல். ஹார்முஸ் நீரிணையை சர்வதேசப் போக்குவரத்திற்காக மீண்டும் திறத்தல். பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துதல். இதற்குப் பதிலாக ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல்.

அமெரிக்காவின் இந்த 15 அம்சத் திட்டத்தை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது. குறிப்பாக, தனது பாதுகாப்புக்கு ஆதாரமாக விளங்கும் ஏவுகணைத் திட்டம் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு குறித்துப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே பெரும் பலமாகக் கருதுவதால், அதையும் விட்டுக்கொடுக்க ஈரான் தயாராக இல்லை.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 3 நாட்களாக ஈரானின் மின் கட்டமைப்புகளைத் தாக்காமல் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்துள்ளது. ஆனால், ஈரான் யதார்த்தத்தை உணரத் தவறினால், இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். அதிபர் டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.