"20% கட்டணம் வேண்டும்... ஹார்முஸ் ஜலசந்தியைக் காப்பாற்றியது அமெரிக்கா தான்" - ட்ரம்ப் அடுத்த அதிர்ச்சி!

 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாகவும், அதற்குப் பலனாகச் சர்வதேசக் கப்பல்களுக்கு 20 சதவீதக் கட்டணம் விதிக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு, "அமெரிக்காவின் அத்துமீறலால் இனி இந்த ஜலசந்தி வழியே கப்பல்கள் செல்வது சாத்தியமற்றது" என்று ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி சுமார் 3 மாதங்கள் வரை ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டிருந்தது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாகக் கருதப்படும் இந்த ஜலசந்தி மூடப்பட்டதால், உலகநாடுகளில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் பெட்ரோல், டீசல் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அதன்பின்னர் எட்டப்பட்ட தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தையும் தற்பொழுது முறிவடைந்துள்ளது. அண்மையில் துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

வளைகுடாப் பகுதியில் அமெரிக்கப் படைகள் 3-வது நாளாகத் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,  "ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாட்டை இனி அமெரிக்கா ஏற்கும். ஈரானிடம் தற்போது எதுவும் இல்லை. ஈரானிடம் இருந்து எழுந்த இந்த அச்சுறுத்தலை அமெரிக்கா 47 ஆண்டுகளுக்கு முன்பே கையாண்டிருக்க வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து நிர்வகிக்கும். அந்த ஜலசந்தியின் பாதுகாவலராக அமெரிக்கா திகழும். வேண்டுமானால், அமெரிக்காவை ஹார்முஸ் ஜலசந்தியின் 'காவல் தேவதை' என்று கூட அழைக்கலாம்.

இந்த ஆபத்தான ஜலசந்தியைப் பாதுகாத்துக் காப்பாற்றியது அமெரிக்கா தான். எனவே, அதற்கான பலன்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். இந்த ஜலசந்தி வழியே செல்லும் அனைத்துச் சர்வதேசக் சரக்குக் கப்பல்களுக்கும், பாதுகாப்பு வழங்குவதற்காக 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும். இதற்கான நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஈரானின் பெர்சிய வளைகுடா நீரிணை ஆணையம் தங்களது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் டொனால்ட் டிரம்பிற்குப் பதிலடி கொடுத்துப் பதிவிட்டுள்ளது.

"அமெரிக்கப் படைகளின் சட்டவிரோதமான மற்றும் அத்துமீறிய ராணுவச் செயல்பாடுகள் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சர்வதேசக் கப்பல்கள் கடந்து செல்வது முற்றிலும் சாத்தியமற்றது. வளைகுடாப் பகுதியில் மீண்டும் நிலைத்தன்மையும் அமைதியும் திரும்பியவுடன், கப்பல்களுக்கான பயண அனுமதிகள் திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி பரிசீலிக்கப்படும். இந்த ஜலசந்தியில் பயண அனுமதியைப் பெறுவதற்கான ஒரே வழி ஈரானின் அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமே என்பதை உலக நாடுகள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா 20 சதவீதக் கட்டணம் வசூலிப்போம் என்று அறிவித்திருப்பதற்கு பிரேசில் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளின் இந்த அடுத்தடுத்த பிடிவாதப் போக்குகளால், சர்வதேசக் கடல்வழி வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.