“டீ குடிக்கச் சென்றதால் உயிர் தப்பினோம்..” - நேபாளப் பேரழிவில் உயிர் தப்பிய 54 கன்னடர்கள் கண்ணீர் மல்க பேட்டி!
நேபாளத்தில் ஏற்பட்ட கோஷி ஆற்று வெள்ளத்தில் ஆன்மிகச் சுற்றுலா சென்ற பலரும் சிக்கிக்கொண்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 54 கன்னடர்கள் பத்திரமாக பெங்களூரு திரும்பியுள்ளனர்.
நேபாளத்தில் சிக்கித் தவித்த 54 கன்னடர்களை மீட்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நேபாள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, அவர்கள் அனைவரும் நேற்று இரவு விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்; அவர்களைக் கண்ட குடும்பத்தினரும் உறவினர்களும் உணர்ச்சிப்பெருக்குடன் கட்டிணைத்து வரவேற்றனர்.
தாங்கள் வெள்ளத்தில் சிக்கிய பகுதிக்குச் சற்று முன்புதான் நடைபயணத்தின் நடுவே தேநீர் அருந்த ஒரு கடைக்குச் சென்றதாகவும், அங்கே சுமார் அரை மணி நேரம் தாமதித்ததாலேயே காட்டாற்று வெள்ளத்திலிருந்து தப்ப முடிந்தது என்றும் அவர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
ஒருவேளை அந்தச் சிறிய இடைவேளை இல்லையென்றால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்போம் என்றும், தாங்கள் உயிருடன் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கையே இல்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தங்களை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.