தவெக அரசைக் கலைப்பது குறித்துப் பரிசீலிக்க ஆளுநரிடம் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மனு!

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டி, மாநில அரசைக் கலைப்பது குறித்துப் பரிசீலிக்கக் கோரி ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதன் தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், “மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் W.P. (C) எண் 1280/2025 மற்றும் அது தொடர்பான வழக்குகளில் நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் தமிழக அரசு பின்பற்றவில்லை. திருவிழாவை நடத்த வேண்டிய முறையை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு உத்தரவிட்டிருந்த போதிலும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய வெளிப்படையான இணக்கமின்மை, மாநில அரசின் அரசியலமைப்புப் பொறுப்புடைமை குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 144-வது சட்டப்பிரிவு, இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்துச் சிவில் மற்றும் நீதித்துறை அதிகார அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்திற்கு உதவியாகச் செயல்பட வேண்டும் எனக் கட்டளையிடுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறுவது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த ஆட்சிமுறையின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் மேலாதிக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தும் நோக்கில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பரிசீலிக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 167-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து முதலமைச்சரிடம் இருந்து விரிவான விளக்கத்தைக் கோர வேண்டும்.

மாநில அரசின் நடவடிக்கைகள் அல்லது செய்யத் தவறிய செயல்கள், அரசியலமைப்பின் 144-வது பிரிவின் கீழ் உள்ள அதன் கடமைகளை மீறுவதாக அமைகின்றனவா என்பதை ஆராய வேண்டும். அரசியலமைப்பின் 355 மற்றும் 356-வது பிரிவுகளின் கீழ் உரிய அரசியலமைப்புத் தலையீட்டிற்காக (ஆட்சிக் கலைப்பு), இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒரு சிறப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்கச் சூழ்நிலைகள் போதுமானவையா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், பேணவும், தற்காக்கவும் ஆளுநர் பொருத்தமானதாகக் கருதும் பிற அரசியலமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டிய மாநில அரசின் கடமையானது நிர்வாகத்தின் விருப்புரிமைக்கு உட்பட்ட விஷயம் அல்ல, அது ஒரு அரசியலமைப்பு ஆணையாகும் எனவும் வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.