“ஓட்டத் தெரியாத டிரைவரை நம்பி பேருந்தை ஒப்படைத்துவிட்டோம்.. சாணியைக் கரைத்து தலையில் ஊற்றுகிறார்கள்” - தவெக அரசு மீது துரைமுருகன் விமர்சனம்!

 

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த விவகாரம் மற்றும் தவெக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நிர்வாகப் புரிதல் இல்லை

“அரசியலிலும் நிர்வாகத்திலும் 'Optics' எனப்படும் 'பொதுமக்கள் பார்வையில் ஒரு விஷயம் எப்படிப் பார்க்கப்படும்' என்ற புரிதல் மிக முக்கியம். ஆனால், எந்தவித அனுபவமும் நிர்வாகப் புரிதலும் இல்லாமல், சாதாரண விஷயத்தைப் பெரிய பேசுபொருளாக்கி, சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டிருக்கிறது தவெக அரசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேரவையில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3 முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட நாளில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.எல்.ஏ-க்களுக்கான கார் அறிவிப்பைப் பெரிய விஷயமாக்கி உண்மையான வளர்ச்சி விவாதங்களை திசைதிருப்பிவிட்டனர்.

எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் தேவைதான் என்றாலும், அதை நேரடியாகக் கொடுக்காமல், மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்களாக வழங்கி, தேவைக்கேற்பப் பயன்படுத்த அரசாணை வெளியிட்டிருக்கலாம்.

அரசிற்கு இது சிறிய செலவாக இருந்தாலும், மக்களுக்குக் கிடைக்காத ஒரு விஷயம் எம்.எல்.ஏ-க்களுக்கு நேரடியாகக் கிடைக்கும்போது மக்கள் அதை எளிதில் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

"எந்த நிர்வாக அனுபவமும் இல்லாமல் இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்ற நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டோம். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் வேகமாகச் சென்ற பேருந்தை ஒப்படைத்தது போல் உள்ளது.

செங்குத்தான பாதையில் வண்டியை மேலே ஏற்றுவது கடினம்; ஆனால், கீழே இறக்குவது மிக எளிது. தற்போது தமிழ்நாடு வேகமாகக் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது" என்று துரைமுருகன் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.