‘இந்திய சினிமாவை உலகளவில் உயர்த்தணும்...”- ‘ராமாயணா’ பட்ஜெட் குறித்து நடிகர் யாஷ் விளக்கம்!
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் குறித்த விவாதங்களுக்கு, அதில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
‘ராமாயணா’ திரைப்படம் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் பரவி வரும் தகவல்கள் குறித்துப் பேசிய யாஷ், "ரூ.4,000 கோடி என்பது முதல் பாகத்திற்கு மட்டுமேயான செலவு அல்ல. இரண்டு பாகங்களின் தயாரிப்பு, விளம்பரம் மற்றும் உலகளாவிய வெளியீட்டுச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஹாலிவுட் அளவிலான கணக்கீடு அது" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்திய சினிமாவை உலக அளவில் ஒரு மிகப்பெரிய 'மென்சக்தியாக' உயர்த்துவதற்கும், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும் இத்தகைய பிரம்மாண்ட முதலீடுகள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், கன்னட நடிகர் யாஷ் ராவணனாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இப்படத்தின் இந்தி திரையரங்க விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் ஜூலை 30-ஆம் தேதி பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 4:15 மணி) வெளியான இதன் டிரெய்லர் உலக அளவில் இணையத்தில் வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.