“ஒரே இரவில் ஈரானை அழிப்போம்.. அது இன்றாகக் கூட இருக்கலாம்!” - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

 

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள சூழலில், அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் சிதைக்கப் போவதாக அதிபர் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிரான தனது அடுத்தக்கட்டத் திட்டத்தை ஆவேசமாகப் பகிர்ந்துகொண்டார். "ஈரானை ஒரே இரவில் எங்களால் முழுமையாக அழிக்க முடியும். அந்த இரவு இன்றாகக் கூட இருக்கலாம். அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு முன்னால் ஈரான் ஒரு பொருட்டே அல்ல" எனத் தெரிவித்தார்.

இதுவரை ஈரானில் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் முக்கிய இலக்குகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார்.

"இன்று ஏப்ரல் 7ம் தேதி மாலைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்துக் கப்பல் போக்குவரத்திற்கும் ஈரான் திறக்க வேண்டும். இதுவே எங்களது இறுதி எச்சரிக்கை. இல்லையெனில் நாளை ஏப்ரல் 8ம் தேதி 'மின்நிலையம் மற்றும் பாலங்கள் அழிப்பு தினம்'.

ஈரான் தனது பிடிவாதத்தைத் தளர்த்தாவிட்டால், நாளை ஈரானின் முக்கியப் பொருளாதாரக் கட்டமைப்புகள் மீது மெகா தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். 

"நாளை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும். வரலாற்றில் அந்த நாள் 'மின்நிலையம் மற்றும் பாலங்கள் அழிப்பு தினமாக' அறியப்படும்" என அவர் எச்சரித்தார்.

ஏற்கனவே ஈரான் தனது 10 அம்ச நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில், டிரம்பின் இந்த நேரடி எச்சரிக்கை அந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்களை மேலும் கருமையாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால், உலகளாவியப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.