“அப்பழுக்கற்ற தலைவர் நல்லகண்ணு ஐயாவை அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி அனுப்பி வைப்போம் - மு.க.ஸ்டாலின் புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், நல்லகண்ணு அவர்களை ஒரு "சமரசமற்ற போராளி" என்றும் "தீரமிகு தோழர்" என்றும் வர்ணித்துள்ளார்.
"எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது; அதுதான் நல்லகண்ணு" என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த முதலமைச்சர், இருவருக்கும் இடையிலான ஆழமான நட்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கலைஞருடன் தோளோடு தோள் நின்று அவர் ஆற்றிய போராட்டங்களை முதலமைச்சர் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மாடல் அரசின் சார்பில் நல்லகண்ணு அவர்களுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கியதை தனது வாழ்வின் பெரும் பேறாகக் கருதுவதாக ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தான் பெற்ற விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அரசிடம் ஒப்படைத்த அவரது அப்பழுக்கற்ற நேர்மையைப் பாராட்டியுள்ளார். பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்திற்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டும் என்பதில் ஐயா உறுதியாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம், காவல்துறை மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்குகள் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஐயா நல்லகண்ணு அவர்களின் உடல் நாளை மாலை 3:30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது விருப்பப்படியே மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட உள்ளது.