வார இறுதி விடுமுறை.. தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! 

 

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் எளிதாகப் பயணம் செய்யும் வகையில், சென்னையிலிருந்தும் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் சுமார் 1,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

நாளை வெள்ளி (ஜூலை 10) மற்றும் சனிக்கிழமை (ஜூலை 11) ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து முனையங்களிலிருந்து மொத்தம் 920 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு போன்ற முக்கிய நகரங்களுக்கு வெள்ளிக்கிழமை 420 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் என மொத்தம் 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து  கள்ளக்குறிச்சி, பொன்னேரி, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய வழித்தடங்களுக்கு தலா 20 வீதம் மொத்தம் 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமன்றி பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு வார இறுதியில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அன்று திரும்புவதற்கு வசதியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்த வார இறுதிப் பயணத்திற்காக வெள்ளிக்கிழமை 8,990-க்கும் மேற்பட்ட பயணிகளும், சனிக்கிழமை 3,140-க்கும் மேற்பட்டோரும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திரும்புவதற்கு 9,200-க்கும் மேற்பட்ட பயணிகளும் ஏற்கனவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர்.

பயணிகள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அதிகாரப்பூர்வ இணையதளம் (www.tnstc.in) அல்லது TNSTC மொபைல் செயலி மூலமாக முன்கூட்டியே தங்களது இருக்கைகளை முன்பதிவு செய்து தடையற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.