வார விடுமுறை.. தமிழகம் முழுவதும் 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

வார விடுமுறையை முன்னிட்டுப் பயணிகள் சிரமமின்றிப் பயணம் செய்யும் வகையில், சென்னை மற்றும் இதர முக்கியப் நகரங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2,655 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வார விடுமுறை நாட்களை ஒட்டிச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்குத் தினசரி தலா 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, அன்றைய தினம் மட்டும் பல்வேறு இடங்களிலிருந்து 805 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.