தூங்கிய சிறுமியை கிணற்றில் வீசிய கொடூர அத்தை ... நெஞ்சை உறைய வைக்கும்  பதற்றம்!

 

ராமநாதபுரத்தில் 5 வயது இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒருவரான சாய் தீப்தி என்ற சிறுமி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகணேஷின் மனைவி கார்த்திகை செல்வி, தனது இரட்டைக் குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானதைத் தொடர்ந்து தேடியபோது, அருகில் இருந்த உறை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டாள்.

காவல் துறையினர் நடத்திய அதிரடி மற்றும் துருவி துருவி நடத்திய விசாரணையில், சிறுமியின் தாய்மாமாவின் மனைவியான சபரிகா (22) என்ற கொடூர அத்தையே இந்த விபரீதக் கொலையைச் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட சபரிகாவை மாமியார் குடும்பத்தினர் ஏளனமாக நடத்தியதோடு, அவருக்குப் பிறந்த மாற்றுத்திறனாளி குழந்தையையும் வெறுத்துள்ளனர். அதே நேரத்தில் கார்த்திகை செல்வியின் அழகான குழந்தைகளைக் குடும்பத்தினர் கொண்டாடியதும், குழந்தையின் காதணி விழாவிற்குச் சபரிகாவின் நகைகளைக் கேட்டதும் அவரது மனதில் தீராத வன்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, நள்ளிரவில் அனைவரும் அசந்து தூங்கிய நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சாய் தீப்தியைச் சபரிகா நைசாகத் தூக்கிச் சென்றுள்ளார். வழியில் விழித்துக் கொண்ட சிறுமி "அத்தை எங்கே செல்கிறோம்?" என்று மழலையுடன் கேட்க, "ஒன்றுமில்லை தூங்கு" எனத் தட்டிக் கொடுத்துத் தனது தோளிலேயே தூங்க வைத்துள்ளார். தண்டவாளம் அருகே கொண்டு செல்ல முயன்றபோது நாய்கள் குரைத்ததால் பயந்து திரும்பிய சபரிகா, சந்தேகம் வந்துவிடும் என்ற பயத்தில் அருகில் இருந்த உறை கிணற்றுக்குள் அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொடூரமாகத் தூக்கி வீசிவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டார். கைதான சபரிகா தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.