"நாங்க மக்களுடைய டீம்... எந்த கூட்டணியும் கிடையாது” - இப்தார் விழாவில் விஜய் உறுதி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பரப்பப்படும் வதந்திகளுக்கு மிகத்தெளிவாக முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த விழாவில் பங்கேற்கச் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 இஸ்லாமியப் பெரியவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகளுக்கு மட்டுமே முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வீடியோ கண்காணிப்புக் குழு இந்த நிகழ்வு முழுவதையும் பதிவு செய்தது. தொண்டர்கள் வருகை மற்றும் மேடைப் பேச்சுக்கள் அனைத்தும் அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட்டன. நோன்பு திறப்பு நிகழ்விற்குப் பிறகு மேடையில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் கூட்டணி மற்றும் கொள்கை குறித்த வதந்திகளுக்கு நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.
"நான் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து என்னைப் பற்றியும், நமது கட்சியைப் பற்றியும் திட்டமிட்டே பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நாம் அந்த டீம், இந்த டீம் என்று சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால் நான் சொல்கிறேன், நாம் எதற்கும் பி-டீம் கிடையாது; நாம் எப்போதும் மக்களுடைய டீம். தவெக யாரிடமும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் நமது தலைமையில் தான் ஆட்சி அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் யாருடைய நிழலிலும் ஒதுங்க வேண்டிய அவசியம் இல்லை."
"நமது மதச்சார்பற்ற கொள்கையில் எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை. விக்கிரவாண்டி மாநாட்டில் நான் சொன்னதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். எதற்காகவும், யாருக்காகவும் நமது அடிப்படை லட்சியத்தை நான் கைவிட மாட்டேன். எனவே, அவதூறுகளை நம்பாதீர்கள்" என்ற விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, முக்கியக் கட்சிகளுடன் தவெக ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாக எழுந்த யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புனித இஃப்தார் மேடையில் மதச்சார்பின்மை குறித்துப் பேசியதன் மூலம், சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அவர் முயற்சி செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பிற்கு மத்தியிலும், தனது "தனித்துப் போட்டி" என்ற நிலைப்பாட்டைத் துணிச்சலாக முன்வைத்துள்ளார்.