மேற்காசிய மோதல்: பிரதமர் மோடியின் மக்களவை உரையின் முக்கிய அம்சங்கள்!

 

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் மூன்று வாரங்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், இது குறித்துப் பிரதமர் மோடி மக்களவையில் கவலை தெரிவித்தார். "மேற்காசியாவில் நிலவி வரும் சூழல் மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த 2 முதல் 3 வாரங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இந்த அவையில் விரிவான விவரங்களை அளித்துள்ளனர்."

"3 வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இந்த மோதலால் உலகளாவியப் பொருளாதாரம் (Global Economy) பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இது வெறும் நாடுகளுக்கு இடையேயான போர் மட்டுமல்ல, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்றவை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன."

"பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, இந்த மோதலுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகளின் அனைத்து தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமைதி திரும்புவதே உலக நலனுக்கு உகந்தது" எனப் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டது போல, கடந்த சில வாரங்களில் மேற்காசியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.