மேற்காசியப் போர் பதற்றம்: 7.88 லட்சம் பேர் இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்பினர்!

 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மேற்காசியப் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும், பிப்ரவரி 28 முதல் இதுவரை சுமார் 7.88 லட்சம் பேர் இந்தியாவுக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், பல நாடுகளின் வான்வெளிப் பகுதியில் விமானங்கள் பறக்க இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஈராக், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து நேரடியாக விமானங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது.

இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு அண்டை நாடுகளின் உதவியுடன் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வருகிறது: ஈரான் நாட்டிலிருந்து அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இஸ்ரேல் நாட்டில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாக மீட்புப் பணி நடைபெறுகிறது. ஈராக் நாட்டில் இருந்து ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். குவைத் & பஹ்ரைன் பகுதிகளில் இருந்து சவுதி அரேபியா வழியாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "வான்வெளி திறந்திருக்கக் கூடிய நாடுகளில் இருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதன்மையான நோக்கம். கடினமான சூழலிலும் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்புப் பணிகள் தடையின்றி நடைபெறுகின்றன" என்று தெரிவித்தார்.

நாளை இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறவுள்ள உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், விமானப் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.